பள்ளி நிறுவனர்:
பள்ளி நிறுவனர் இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அவர்கள், கல்வியில் ஆழ்ந்த ஈடுபாடும், மாணவர்கள் தங்கள் முழுத் திறனையும் அடைய உதவுவதில் அர்ப்பணிப்பும் கொண்டிருந்தவர். கல்வியின் ஆற்றல் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டிருந்தார். அவர்களுடைய வாழ்க்கை வராலாற்றுச் சுருக்கமும், அவர் கல்விக்கு ஆற்றிய மகத்தான தொண்டும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

ராவ்பகதூர் இ.சி. ஈஸ்வரன் பிள்ளை
தென்றல் தவழும், தீந்தமிழ் குலாவும், தென்பொதிகைத் திருக்குற்றாலத்தருகே,
இயற்கை எழில் சூழ்ந்த கிராமமான “இலஞ்சி” எனும் இலக்கியப் பெயர் கொண்ட ஊரில் அவதரித்த பெருமகனார் ராவ்பகதூர்.இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அவர்கள் 1884ல் இலஞ்சியில் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தில் தோன்றியவர்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் – என்ற செந்நாப் போதரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து காட்டிய வள்ளல் – வாழ்நாள் முழுவதும் கொடை வள்ளலாகவே வாழ்ந்து காட்டியதோடு மட்டுமல்லாமல் இலட்சக்கணக்காணோரின் எண்ணங்களில் நினைவலைகளாவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கல்வி :
திருச்சி புனிதவளனார் கல்லூரியில் பட்டப்படிப்பும், சைதாப்பேட்டையில் வேளாண் கல்லூரியிலும் பயின்று பட்டம் பெற்றிருக்கிறார்.
வகித்த பதவிகள் :
வட்ட அளவிலான வாரியத் தலைவராக 1925 – 1930 ( Taluk Board President)
மாவட்ட வாரியத் தலைவராக 1930 – 1938 வரை பதவியேற்று சமுதாயத்திற்கு பல்வேறு தொண்டுகளைச் செய்துள்ளார்.
அரசியல் :
நீதிக் கட்சி சார்பாக (Justice Party) 1934 முதல் 1937 வரை சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றினார். குன்னக்குடி – நடுவக்குறிச்சி மிட்டாதாரராகப் பணியாற்றி இருக்கிறார்.
கல்விச்சேவை :
1930 முதல் 1938 வரை மாவட்டக் கல்விக்குழு துணைத்தலைவராக இருந்து கல்விச் சேவை ஆற்றியுள்ளார்.
கல்விச் சங்க தலைவர் :
ம.தி.தா இந்துக் கல்லூரி திருநெல்வேலி கல்விச் சங்க தலைவராக இருந்து பல அரும்பணிகளைச் செய்துள்ளார். இலஞ்சியின் கல்விச் சங்கத் தலைவராகவும் பொறுப்பேற்று சிறப்பாக பணி புரிந்துள்ளார்.
காந்திமதி அம்மாள் தொடக்கப்பள்ளி :
“எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை” என்ற பாரதியின் வாக்கிற்கிணங்க பெண்கள் அனைவரும் பள்ளி சென்று பயில வேண்டும் என்பதற்காக இலஞ்சியில் சுமார் 1 ஏக்கர் பரப்புள்ள இடத்தில் தன் மனைவி பெயரில் “காந்திமதி அம்மாள்” பெண்கள் பாடசாலையைத் 1923ல் துவக்கினார். தற்பொழுது இப்பள்ளியானது இ.சி.ஈஸ்வரன் பிள்ளை தொடக்கப்பள்ளியாக செயல்படுகிறது. இப்பள்ளியை திரு. I.A. சிதம்பரம் B.E. அவர்கள் நிர்வகித்து வருகிறார்கள்.
ஆன்மீகப்பணி :
இலஞ்சி அருள்மிகு குலசேகரநாதர் கோவில் கர்ப்ப கிரகம், கோபுரம், முன்முகப்பு மண்டபம் ஆகியவற்றைக் கட்டிக் கொடுத்து சிறந்த ஆன்மீகப் பணியும் ஆற்றிவர்.
இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அவர்களுக்கு அறம்வளத்தம்மாள் என்ற ஒரேமகள். தன்மகளை இலஞ்சி வாழ் பெரியவர் அகிலாண்டம்பிள்ளை அவர்களின் மகன் I.A.சிதம்பரம் என்பாருக்கு திருமணம் முடித்து வைத்தார். I.A.சிதம்பரம் -அறம்வளர்த்தம்மாள் இணையருக்கு நான்கு குழந்தைகள். இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். 1.ஈஸ்வரன், 2.ஈஸ்வரத்தம்மாள், 3.அகிலாண்டம், 4. காந்திமதி அம்மாள்.
ஈஸ்வரன் பிள்ளை அவர்களின் மருமகனான I.A.சிதம்பரம் அவர்கள் தன் மாமனாரைப் போல வள்ளலாகவே வாழ்ந்த காட்டியவர். ஆன்மீகம், கல்வி, ஏழைகளுக்கு உதவுதல், பசியால் வாடுகிறவர்களுக்கு தினந்தோறும் வீட்டில் வாழை இலை விருந்து படைத்தவருமாவார். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்து பல்வேறு சமூகப் பணியும் ஆற்றியவர்.
இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அவர்களின் வழித் தோன்றல்கள்:
இ.சி.ஈஸ்வரன் அவர்களின் கொள்ளுப்பேரன்கள்:
I.A.சிதம்பரம் B.E, இலஞ்சி.
முனைவர் I.A. சிதம்பரம் M.E Phd (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
I.K சுப்பிரமணியன் B.Sc., B.L
N. அறம்வளர்த்தம்மாள்
V. அறம்வளர்த்தம்மாள்
இவர்கள் அனைவரும் தனது தாத்தா, கொள்ளுத்தாத்தாவைப் போல பல்வேறு வகையில் மக்களுக்கு உதவி வருகிறார்கள்.
கேடில் விழுச்செல்வமாகிய கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வளவு பெரிய மைதானத்தை இப்பள்ளி வழங்கி பல இலட்சக்கணக்கான மாணவர்களிடத்தில் அறிவெனும் தீபமேற்றி அவர்கள் வாழ்வில் வெற்றி நடை போட காரணமாக இருந்தவர் ராவ்பகதூர் இ.சிஈஸ்வரன் பிள்ளை அவர்கள்.